குமரியில் இருந்து வெளியூர் செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கம் பயணிகள் கூட்டம் அலைமோதியது

பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூர் செல்வதற்காக குமரியில் இருந்து 84 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாகர்ேகாவில் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-01-18 06:22 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை நிமித்தமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். மேலும் ஏராளமான மாணவ-மாணவிகள் வெளியூர்களில் தங்கியிருந்து கல்வி பயின்று வருகிறார்கள். இவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்தனர். தொடர்விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில் மீண்டும் தாங்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இதனால், நேற்று மாலை நாகர்கோவில், வடசேரி பஸ்நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் பயணம் செய்வதற்காக அவர்கள் போட்டி போட்டு சீட் பிடித்தனர்.

சிறப்பு பஸ்கள்

பயணிகள் வசதிக்காக குமரி மாவட்டத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து சென்னைக்கு 25 பஸ்கள், மதுரைக்கு 30, திருப்பூருக்கு 5, கோவைக்கு 15 என மொத்தம் 75 பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னைக்கு 7 பஸ்கள், கோவை மற்றும் பெங்களூருவுக்கு தலா ஒரு பஸ் என மொத்தம் 9 பஸ்கள் புறப்பட்டன. குமரி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 84 சிறப்பு பஸ்கள் இயக்கபட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கண்ட பஸ்கள் நேற்று காலை 6 மணி முதலே வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றன. சிறப்பு பஸ்கள் இரவு 11 மணி வரை இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்