பெங்களூருவில், ரூ.21 ஆயிரத்து 91 கோடியில் வெளிவட்டச்சாலை முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்

பெங்களூருவில் ரூ.21 ஆயிரத்து 91 கோடி மதிப்பீட்டில் வெளிவட்டச்சாலை அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

Update: 2021-01-18 22:56 GMT
பெங்களூரு, 

பெங்களூரு வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஆர்.விஸ்வநாத் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

உலகின் சிறந்த தொழில்நுட்ப நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதல் இடத்தை பிடித்துள்ளது. அதனால் பெங்களூரு நகரில் உலக தரத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு தயாராக உள்ளது. பெங்களூருவின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனைகளை கூறி வருகிறார். அதன்படி பெங்களூரு மிஷன்-2022 என்ற செயல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் கூடுதலாக 24 என்ஜினீயர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களை வேறு இலாகாக்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இந்த ஆணையத்தில் 196 வக்கீல்கள் உள்ளனர். அந்த எண்ணிக்கை குறைக்கப்படும். ரூ.21 ஆயிரத்து 91 கோடி மதிப்பீட்டில் அரசு-தனியார் பங்களிப்பில் வெளிவட்டச்சாலை அமைக்கப்படும். இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. குறித்த காலத்திற்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள வீட்டுமனைகள் மற்றும் குடியிருப்புகளை பொதுமக்களுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வளர்ச்சி பணிகள் ஆய்வு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்