மதகுபட்டி அருகே மரத்தில் கார் மோதல்; அமைச்சரின் உதவியாளர் உள்பட 2 பேர் படுகாயம்

மரத்தில் கார் மோதியதில் அமைச்சரின் உதவியாளர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2021-01-19 16:14 GMT
கல்லல்,

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிவ் அருகே கண்டுபட்டியில் மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது. இந்த மஞ்சுவிரட்டை கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தனது காரில் சிவகங்கைக்கு புறப்பட்டார்.

அமைச்சரின் உதவியாளர் சசிக்குமார்(வயது 45) மற்றொரு காரில் அமைச்சரை பின்தொடர்ந்து சென்றார். அந்த காரை சுரேஷ்(35) என்பவர் ஓட்டினார். மதகுப்பட்டி அருகே சென்ற போது திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது. தனக்கு பின்னால் வந்த கார் விபத்துக்குள்ளானதை அறிந்ததும் அமைச்சர் தனது காரை நிறுத்தி, பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார்.

விபத்துக்குள்ளான கார் கண்ணாடியை உடைத்து, படுகாயம் அடைந்த சசிக்குமார், டிரைவர் சுரேஷ் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்