9-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த முதியவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2021-01-21 22:17 GMT
தானே, 

தானே, ரபோடி பகுதியை சேர்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரின் வீட்டிற்கு ஆட்டோ டிரைவரான 62 வயது உறவினர் அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு டியூசன் படிக்க சிறுமி சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவரான முதியவர் அவரை டியூசனுக்கு அழைத்து செல்வதாக கூறி ஆட்டோவில் ஏறுமாறு கூறினார். அவரின் பேச்சை நம்பிய சிறுமி ஆட்டோவில் ஏறினார்.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முதியவர் அந்த சிறுமியை மும்ரா பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச்சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்தார். மேலும் அதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டினார். இதன்பின்னரும் பலமுறை அவர் சிறுமியை மிரட்டி கற்பழித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி பெற்றோரின் உதவியுடன் முதியவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிறுமியை கற்பழித்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவர் மீதான வழக்கு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் ரூ.22 ஆயிரம் அபராதமும் விதித்தது.

மேலும் செய்திகள்