பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் கைது வினய் குல்கர்னியின் ஜாமீன் மனு தள்ளுபடி தார்வார் ஐகோர்ட்டு அதிரடி

பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் கைதான வினய் குல்கர்னியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தார்வார் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-01-22 23:08 GMT
தார்வார்,

தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தவர் யோகேஷ் கவுடா. பா.ஜனதா பிரமுகரான இவர் தார்வார் டவுனில் உடற்பயிற்சி கூடமும் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி மர்மநபர்கள் அவரை உடற்பயிற்சி கூடத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்திருந்தனர். இதுதொடர்பாக தார்வார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, யோகேஷ் கவுடாவை கூலிப்படையை ஏவி காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி வினய்குல்கர்னி கொலை செய்ததாகவும், மேலும் கொலையை மறைக்க ஆதாரங்களை அழித்ததுடன், சாட்சிகளை கலைத்ததாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதன்தொடர்ச்சியாக கடந்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் 5-ந்தேதி வினய் குல்கர்னி, இவரது சகோதரர் விஜய் குல்கர்னி ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் விஜய் குல்கர்னி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் வினய் குல்கர்னி கடந்த 2½ மாதங்களாக பல்லாரி இன்டல்கா சிறையில் இருந்து வருகிறார்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி வினய் குல்கர்னி சார்பில் தார்வார் ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது வினய்குல்கர்னிக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது தரப்பு வக்கீல் வாதிட்டார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது, ஜாமீன் வழங்கினால் சாட்சி மற்றும் ஆதாரங்களை அழித்துவிடுவார் என சி.பி.ஐ. தரப்பு வக்கீல் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.என்.நடராஜ், வினய்குல்கர்னியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் வினய்குல்கர்னி சோகத்தில் இருந்து வருகிறார். மேலும் அவரது தரப்பு வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே வினய்குல்கர்னி 2 தடவை ஜாமீன் கோரி தார்வார் மாவட்ட கோர்ட்டு மற்றும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக தார்வார் ஐகோர்ட்டு கிளையில் சி.பி.ஐ. அதிகாரிகள் வினய் குல்கர்னிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மேலும் செய்திகள்