கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு பதில் ஏன் கையகப்படுத்தக் கூடாது? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு பதிலாக, உரிய இழப்பீட்டுத் தொகையை இந்து சமய அறநிலையத்துறைக்கு செலுத்திவிட்டு அந்த இடத்தை ஏன் கையகப்படுத்தக்கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2021-01-23 04:11 GMT
புதிய மாவட்டம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கலெக்டர் அலுவலகம் அமைக்க வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், கோவில் நிலத்தை நீண்டகாலத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த நவம்பர் 28-ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நிரந்தர அலுவலகம்
அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, ‘முறையான சட்டவிதிகளைப் பின்பற்றாமல் குத்தகைக்கு நிலத்தை வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியை சுற்றியே அரசுக்கு சொந்தமான 39 இடங்களில் நிலம் உள்ளபோது, கோவில் நிலத்தை குத்தகைக்கு விடுவது ஏற்புடையதல்ல. இந்து சமய அறநிலைத்துறை சட்டப்படி கோவில் நிலங்கள், கோவிலின் தேவை மற்றும் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். என்னதான் குத்தகை மூலம் கோவிலுக்கு வருமானம் கிடைத்தாலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கப்பட்டுவிட்டால், அது நிரந்தரமாகிவிடும். அதன்பின்னர் அந்த நிலம் கோவிலுக்கு திரும்பக் கிடைக்காமல் போய்விடும்’ என்று வாதிட்டார்.

கோவிலுக்கு வருமானம்
அரசு தரப்பில் ஆஜரான அட்வேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘சம்பந்தப்பட்ட இடத்தின் மூலம் கோவிலுக்கு தற்போது எந்த வருமானமும் இல்லை. அந்த இடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைப்பதன் மூலம் கோவிலுக்கு மாதம் ரூ.1.3 லட்சம் வாடகையாக கிடைக்கும். இதன்மூலம் கோவிலுக்கு வருவாய் பெருகும். வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலைப் புனரமைக்க அரசு ரூ.2.7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கோர்ட்டுகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலம் இடம்பெற உள்ளன. இவற்றை கட்டுவதற்கு மனுதாரர் குறிப்பிடும் மற்ற 39 இடங்கள் உகந்ததாக இல்லை. அதனால்தான் கோவிலுக்குச் சொந்தமான இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

ஏன் கையகப்படுத்தக் கூடாது?
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்குப் பதிலாக அரசே உரிய இழப்பீட்டுத் தொகையை அறநிலையத்துறைக்குச் செலுத்திவிட்டு ஏன் அந்த இடத்தை கையகப்படுத்தக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், ‘பொதுநல வழக்காகத் தெரிந்தாலும், மனுதாரர் வைக்கும் வாதங்கள் திருப்திகரமாக இல்லை. எனவே, தகுந்த சான்றுகளோடு வாதங்களை முன்வைக்க வேண்டும்’ என்று கூறி, விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்