குற்றாலம், களக்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்தனர்

குற்றாலம், களக்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவிகள், தலையணையில் ஆனந்தமாக குளித்தனர்.

Update: 2021-01-24 00:20 GMT
தென்காசி,

குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

உற்சாக குளியல்

கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் மழை இல்லை. ஆனாலும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவியில் தண்ணீர் பரவலாக விழுகிறது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர்.

களக்காடு தலையணை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட களக்காடு தலையணை சுமார் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 13-ந்தேதி திறக்கப்பட்டது. ஆனால், திறக்கப்பட்ட சில நாட்களில் தொடர் மழையால் தலையணையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தலையணை மீண்டும் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளம் தணிந்ததால் களக்காடு தலையணை கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் தலையணைக்கு தினமும் ஏராளமானவர்கள் படையெடுத்து வருகின்றனர். நேற்றும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் திரளான சுற்றுலா பயணிகள் வந்து தலையணையில் மகிழ்ச்சியாக குளித்து சென்றனர்.

மேலும் செய்திகள்