இளையமதுகூடம் பகுதியில் பழுதான தொகுப்பு வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

இளையமதுகூடம் பகுதியில் பழுதான தொகுப்பு வீடுகளை இடித்து அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2021-01-24 03:22 GMT
சீர்காழி,

சீர்காழி ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் விஜயலெட்சுமி, கஜேந்திரன், துணை தலைவர் உஷாநந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சுதாகர் வரவேற்று பேசினார்.

இளநிலை உதவியாளர் ஜீவானந்தம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-

பழுதான தொகுப்பு வீடுகள்

அறிவழகன் (சுயேச்சை):- இளையமதுகூடம் பகுதியில் வாழ்வதற்கே தகுதியற்ற நிலையில் உள்ள பழுதான தொகுப்பு வீடுகளை இடித்து அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். கன்னிகோவில், சன்னாஓடை புதுத்தெரு ஆகிய பகுதி மக்கள் 2 கி.மீ. தூரம் உள்ள ராதாநல்லூர் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியுள்ளதால், இதேபகுதியில் கார்டுகளை பிரித்து பகுதிநேர அங்காடி திறக்க வேண்டும், இளையமதுகூடம் பகுதியில் உள்ள பழமையான இடியும் நிலையில் உள்ள கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்றார்.

துர்காமதி (தி.மு.க.):- வள்ளுவக்குடியில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கடந்த சில மாதங்களாக சர்க்கரை பரிசோதனை மேற்கொள்வதில்லை. அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சிகிச்சையளிப்பதில்லை என்றார்.

இ.சி.ஜி. எந்திரம் பழுது

பஞ்சுகுமார் (தி.மு.க.):- திருவெண்காடு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் உள்ள இ.சி.ஜி. எந்திரம் பழுது ஏற்பட்டுள்ளது எனக்கூறி, இ.சி.ஜி. எடுப்பவர்களை மருத்துவமனை வட்டாரத்தினர் திருப்பி அனுப்புகின்றனர். அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் இ.சி.ஜி. எடுத்து தருகின்றனர்.

அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சையளிக்காமல் சீர்காழி, மயிலாடுதுறை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்புகின்றனர். இதுபோன்ற காரணங்களால் இதுவரை மாரடைப்பு சிகிச்சைக்கு வந்தவர்கள் சுமார் 20 பேர் வரை இறந்துள்ளனர். ேமலும் அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர் இல்லாத நிலை தொடர்கிறது என்றார்.

வளர்ச்சி பணிகள்

நடராஜன் (அ.தி.மு.க.):- திருநகரியில் உள்ள துணை சுகாதாரநிலைய கட்டிடம் சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. நெப்பத்தூர்-திருநகரி இணைப்பு சாலை, குரவளூர் கோவில் செல்லும் சாலை ஆகியவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து உறுப்பினர்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மனுக்களாக ஒன்றியக்குழு தலைவரிடம் வழங்கினர். கூட்டத்தில் பொறியாளர்கள் கலையரசன், தாரா, சிவகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்