சட்டசபை தேர்தலில் பேரம் பேசுவதற்காக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. நாடகம் ஆடுகிறது

சட்டசபை தேர்தலில் பேரம் பேசுவதற்காக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. நாடகம் ஆடுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2021-01-24 03:58 GMT
அண்ணாமலைநகர்,

தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க.வினர் மனு கொடுக்கிறார்கள். இது தேர்தல் காலத்தில் பேரம் பேசுவதற்காக நாடகம் நடத்துகின்றனர். இக்கோரிக்கையை நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தபோதே கேட்டிருக்கலாமே.

நியாயம் இல்லை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு கல்லூரி என அறிவித்துவிட்டு அரசு கல்வி கட்டணத்தை பெறாமல் மாணவர்களை ஏமாற்றுகின்றனர். இதற்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் அவர்களை ஒடுக்க நினைப்பது நியாயம் இல்லை.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இக்கல்லூரியில் படித்தவர். அவராவது இப்பிரச்சினையை தீர்க்க முன் வந்திருக்கலாம். இதையெல்லாம் பார்க்கும்போது மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் தனியார் கைக்கு போகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தி.மு.க. கூட்டணி வெற்றி

தி.மு.க. ஆட்சியில் கடலூரில் மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதனை முடக்க வேண்டும் என்பதற்காக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை அரசு மருத்துவக்கல்லூரியாக அறிவிக்கப்பட்டதா?.

தி.மு.க. சார்பில் கிராமங்களில் நடத்தப்படும் மக்கள் கிராம சபை கூட்டம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்