ஈரோட்டில் மனுநீதி திட்ட முகாம்: 128 பேருக்கு 14 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

ஈரோட்டில் நடந்த மனுநீதி திட்ட முகாமில் 128 பேருக்கு 14 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.

Update: 2021-01-24 05:49 GMT
ஈரோடு,

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஈரோடு ‘அ’ கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மனுநீதி திட்ட முகாம் குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது. இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மொத்தம் 168 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை கலெக்டர், அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு 128 பேருக்கு ரூ.13 லட்சத்து 92 ஆயிரத்து 594 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படிக்கும் 154 மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களும் வழங்கப்பட்டன.

விலையில்லா தையல் எந்திரம்

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வருவாய்த்துறையின் மூலம் 100 பேருக்கு தலா 12 ஆயிரம் மதிப்பீட்டில் ஓய்வூதிய தொகைக்கான ஆணையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 6 பேருக்கு தலா ரூ.12 ஆயிரத்து 799 மதிப்பீட்டில் தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசியும், சமூக நலத்துறை சார்பில் 16 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்து 400 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 6 பேருக்கு ரூ.4 ஆயிரத்து 900 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளும் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி (பொறுப்பு) வாணி லட்சுமி ஜெகதாம்பாள், சமூக நல அதிகாரி பூங்கோதை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி இளங்கோ, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சீனிவாசன், தாசில்தார் பரிமளாதேவி, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீஷ், பெரியார் நகர் அவைத்தலைவர் மீன்ராஜா என்கிற ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்