கர்நாடகத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கலெக்டர்களுக்கு, எடியூரப்பா உத்தரவு

கர்நாடகத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-01-24 21:20 GMT
சிவமொக்கா, 

சிவமொக்கா தாலுகா அப்பலகெரே அருகே ஹூனசோடு கிராமத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரிக்கு கடந்த 21-ந்தேதி லாரியில் ஜெலட்டின் குச்சிகள், டைனமட் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் கொண்டு சொல்லப்பட்டன. ஹூனசோடு கல்குவாரி பகுதியில் வந்தபோது லாரியில் இருந்த வெடிப்பொருட்கள் பயங்கரமாக வெடித்தன. இதில் லாரி மற்றும் காரில் சென்ற 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபற்றி உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் சிவமொக்காவுக்கு சென்ற முதல்-மந்திரி எடியூரப்பா, வெடி விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சம்பவம் தொடர்பான விவரங்களை அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

நேற்று காலை ஹெலிகாப்டர் மூலம் முதல்-மந்திரி எடியூரப்பா சிவமொக்காவில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக ஹெலிபேட் தளத்தில் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக தடை விதிக்க வேண்டும். சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் எக்காரணம் கொண்டும் சட்டவிரோத கல்குவாரிகளை அனுமதிக்க முடியாது.

கல்குவாரிகளை முறைப்படுத்த கனிமவளத்துறை அதிகாரிகளிடம் முறையான விண்ணப்பம் வழங்க வேண்டும். அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து அனுமதி வழங்கிய பிறகே கல்குவாரிகளை நடத்த வேண்டும். சட்டப்படி அனுமதி வாங்கிய கல்குவாரிகள் செயல்பட எந்த தடையும் இல்லை.

மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் பேபி ஹில் பகுதியில் முைறகேடான கல்குவாரிகள் நடப்பதால் அருகில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் குவாரி தொழிலை முழுமையாக நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளேன்.

மாநிலத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ஜல்லி கற்கள் தேவை உள்ளது. இதனால் முறைப்படி அனுமதி வாங்கி செயல்படும் ஜல்லி கற்கள் தயாரிப்பு குவாரிகளுக்கு அதிகாரிக்ள இடைஞ்சல் தரக்கூடாது. சட்டவிரோத கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கினால் அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.

இன்று (அதாவது நேற்று) நடக்க இருந்த அரசு முதல் நிலை உதவியாளர் (எப்.டி.ஏ.) தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக முழு தகவல்களை பெற்றுள்ளேன். எப்.டி.ஏ. தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த விசாரணையில் முழு தகவல் தெரியவரும்.

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதவியில் உள்ளவர்களுக்கு இதில் தொடர்பு இருந்தால் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

வருகிற 26-ந்தேதி (நாளை) குடியரசு தினத்தன்று பெங்களூரு நகரில் டிராக்டர் பேரணி நடத்துவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அவர்கள் குடியரசு தினவிழாவுக்கு எந்த இடையூறும் செய்யமாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனால் வருகிற 26-ந்தேதி விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது சிவமொக்கா மாவட்ட கலெக்டர் சிவக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்