சத்தி வனப்பகுதியில் 30 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள், சிறுத்தை, புலி தோல் தீ வைத்து எரிப்பு

சத்தியமங்கலம் வனப்பகுதியில் 30 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள், சிறுத்தை-புலியின் தோல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

Update: 2021-01-31 00:18 GMT
யானை தந்தங்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, டி.என்.பாளையம், தலமலை, கடம்பூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சந்தன கடத்தல் வீரப்பன் காலத்தில் மர்மநபர்களால் வேட்டையாடப்பட்ட யானையின் தந்தங்கள், சிறுத்தை, புலியின் தோல், கரடியின் பல், மான் கொம்புகள் மீட்கப்பட்டு வனப்பகுதியில் உள்ள சந்தன கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தீ வைத்து எரிப்பு
இந்த நிலையில் இவை அனைத்தையும் தீ வைத்து எரிக்குமாறு தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று காலை 10 மணி அளவில் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வன உயிரின மருத்துவமனைக்கு யானையின் தந்தங்கள், சிறுத்தை, புலியின் தோல், கரடியின் பல், மான் கொம்புகள் எடுத்து வரப்பட்டன.

பின்னர் அவை மாவட்ட கள இயக்குனர் நிகர்ரஞ்சன் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது. இதுபற்றி அவர் கூறும்போது, ‘குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள், புலித்தோல், சிறுத்தை தோல், கரடி பல், மான் கொம்புகள் உள்ளிட்டவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. மேலும் இந்த மாதிரியான குற்றங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்பதற்காகவும், யானை தந்தங்கள் உள்ளிட்டவற்றை காட்சிப் பொருளாக வீடு, அலுவலகங்களில் வைக்கப்படுவதை தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.’ என்றார்.

மேலும் செய்திகள்