‘மிக்சோபதி’ சிகிச்சை முறைக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் தனியார் டாக்டர்கள் உண்ணாவிரதம் 14-ந்தேதி வரை நடக்கிறது

‘மிக்சோபதி’ மருத்துவமுறையை எதிர்த்து தமிழகத்தில் தனியார் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கியது.

Update: 2021-02-02 03:21 GMT
சென்னை, 

சித்தா, ஆயுர்வேதம், யுனானி டாக்டர்கள், தங்களது மருத்துவமுறைகளுடன் அலோபதி மருந்துகள் அளிக்கவும், 52 வகையான முக்கிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இவ்வாறு அனைத்து துறைகளும் கலந்து அளிக்கும் சிகிச்சை முறையை ‘மிக்சோபதி’ என கூறப்படுகிறது. இந்த ‘மிக்சோபதி சிகிச்சை முறையை எதிர்த்து இந்தியா முழுவதும் நேற்று தனியார் டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தேனாம்பேட்டையில் இந்திய மருத்துவ சங்கத்தின் சென்னை கிளை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தை இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜி.ராகவேலு தொடங்கி வைத்தார். உண்ணாவிரதத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் ஊடக பிரிவு தலைவர் டாக்டர் முத்துராஜா, சென்னை கிளை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பூபதி ஜாண் ஆகியோர் பங்கேற்றனர். போராட்டத்தின்போது டாக்டர் பூபதிஜாண் கூறியதாவது:-

14-ந்தேதி வரை...

அலோபதி டாக்டர்கள் பாரம்பரிய மருத்துவமுறை, சித்தா, ஆயுர்வேதம் முறைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ‘மிக்சோபதி’ சிகிச்சை முறை கொண்டு வருவதால் வரும் காலத்தில் இந்திய மருத்துவத்தின் தனித்தன்மை இல்லாமல் போய்விடும். வரும் காலத்தில் ஒரே மருத்துவ படிப்பு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகள் நடக்காது.

அறுவை சிகிச்சை குறித்து தனி படிப்பில்லாமல் சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் எவ்வாறு அறுவைசிகிச்சை செய்ய முடியும். இதனால் பொதுமக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். மேலும் ‘மிக்சோபதி’ முறையால் போலி டாக்டர்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் நல்ல டாக்டர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே ‘மிக்சோபதி’ சிகிச்சை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உண்ணாவிரதம் வரும் 14-ந்தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்