குடமுழுக்கு நடந்து ஓராண்டையொட்டி வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் 1008 லிட்டர் பால் அபிஷேகம்

குடமுழுக்கு நடந்து ஓராண்டையொட்டி வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் 1008 லிட்டர் பால் அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்.

Update: 2021-02-02 05:06 GMT
வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பாடைகாவடி, அலகுகாவடி, பன்னீர் காவடி, தொட்டில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இக்கோவில் பாடைகட்டி மகா மாரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று குடமுழுக்கு நடந்து ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி மகாமாரியம்மனுக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மகாமாரியம்மனுக்கு புதிய வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இரவு அன்னவாகனத்தில் மகாமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வலங்கைமான் பகுதியில் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் ரமணி, மேலாளர் சீனிவாசன், தலைமை அர்ச்சகர் செல்வம் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்