காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து விழிப்புணர்வு

திண்டிவனத்தில் காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-02-06 19:23 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சமச்சீர் வளர்ச்சி நிதி உதவியுடன் செயல்படும் ஊட்டச்சத்து காய்கறிகளை மாணவர்களிடையே பிரபலப்படுத்தும் திட்ட தொடக்க விழா மற்றும் ஊட்டச்சத்து காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அறிவியல்நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி அன்புமணி வரவேற்றார்.
மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத்தலைவர் பொன்னையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு கையேடு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு, விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. விவசாயிகளுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.  நாம் விவசாயத்தில் புரட்சி காண வேண்டும். விவசாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயத்துறைக்கு அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், சரியாக பயன்படுத்தி, விவசாயிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.  தமிழகத்தில் எதிர்காலத்தில் விவசாயத்துறை நல்ல வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்றார். 
நிகழ்ச்சியில், மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு துறை குழும தலைவர் ஜெகன்மோகன், திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஸ்ரீதர், வேளாண்மை இணை இயக்குனர் ரமணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஆகியோர் பேசினர். முடிவில் தோட்டக்கலை உதவி பேராசிரியர் நீலாவதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்