நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் முற்றுகை

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் முற்றுகையிட்டனர்.

Update: 2021-02-08 19:39 GMT
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் முற்றுகையிட்டனர். அவர்கள் தங்களது கைகளை கயிற்றால் கட்டி இருந்ததால் பரபரப்பு நிலவியது.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது 50). இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவன தலைவராக உள்ளார். இவர் நேற்று காலையில் தனது ஆதரவாளர்களுடன் ஏராளமான மோட்டார் சைக்கிள்களில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார்.

அங்கு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கண்ணபிரான் உள்ளிட்டவர்கள் தங்களது கைகளில் கயிற்றால் கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கண்ணபிரான் மற்றும் நிர்வாகிகள் சிலரை மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்க போலீசார் அனுமதித்தனர்.

தொடர்ந்து கண்ணபிரான், கலெக்டர் விஷ்ணுவிடம் வழங்கிய மனுவில் கூறி இருப்பதாவது:-
பாதுகாப்பு வழங்க...

நேற்று முன்தினம் ஒரு வழக்கு தொடர்பாக தச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு ஆதரவாளர்களுடன் கையெழுத்திட சென்றேன். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 மர்மநபர்கள் என்னை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், நாட்டு வெடிகுண்டுகளை போலீஸ் நிலையம் முன்பாக வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும். நான் ஜாமீனில் வெளியே வந்ததில் இருந்து என்னைக் கொலை செய்ய சிலர் திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். எங்களது கைகள் கட்டப்பட்டு உள்ளன.
எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், எனது சமுதாய மக்களுக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்களது ஊருக்கு 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். போலீஸ் நிலையம் முன்பாக நாட்டு வெடிகுண்டுகளை வீசிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்