கோவில்பட்டி-கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை

கோவில்பட்டி-கயத்தாறு தாலுகா அலுவலகங்களில் மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-09 17:04 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி-கயத்தாறு தாலுகா அலுவலகங்களில் மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியேறும் போராட்டம்
தெலுங்கானா, பாண்டிச்சேரி மாநிலங்களை போல் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் அரசு உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அரசுத் துறைகளில் பின்னடைவு காலிப்பணியிடங்களை கண்டறிந்து 3 மாதங்களில் 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வெளிப்படையாக அறிவித்து உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், குடியேறும் போராட்டம் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சர்க்கரையப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் முத்துமாலை, நகர தலைவர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மந்திதோப்பு செல்வராஜ், செண்பகபேரி ராமச்சந்திரன், துரைச்சாமிபுரம் ஈஸ்வரி, சிதம்பராபுரம் கருப்பையா, சண்முகநகர் வேல்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை முழங்கினர். மதியம் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. மாலை வரை அவர்கள் போராட்டம் தொடர்ந்தது.
கயத்தாறு
இதேபோன்று கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 50 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த போராட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் சாலமோன்ராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், முகமதுசரிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேலும் செய்திகள்