தர்பூசணி பழங்களுக்கு அடியில் மறைத்து லோடு வேனில் கடத்திய 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் தர்பூசணி பழங்களுக்கு கீழ் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 1 டன் எடை கொண்ட 26 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-02-15 04:53 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று காலை கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு மினி லோடு வேனை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி நிறுத்த முயன்றனர். அப்போது அந்த வேன் நிற்காமல் சோதனைச்சாவடியின் தடுப்புகளை உடைத்தவாறு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான ரோந்து வாகன போலீசார், அந்த வேனை துரத்தி சென்றனர்.

செம்மரக்கட்டைகள் பறிமுதல்

போலீசார் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து துரத்தி வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் அந்த வேனை கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை பகுதியில் சாலையோரம் உள்ள வயல்வெளியில் நிறுத்திவிட்டு, வாகனத்தில் இருந்து இறங்கி டிரைவர் உள்பட 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

அதைத்தொடர்ந்து, போலீசார் வேனை கைப்பற்றி சோதித்த போது, வேனிலிருந்த தர்பூசணி பழங்களுக்கு அடியில் சுமார் 1 டன் எடை கொண்ட 26 செம்மரக்கட்டைகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

செம்மரக்கட்டைகளுடன் பிடிபட்ட வேனை, போலீசார் கும்மிடிப்பூண்டி வனசரகர் சுரேஷ்பாபுவிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனசரக அலுவலகத்தினர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்