புதுவையில் குவிந்த காதல் ஜோடிகள்; பாரதி பூங்காவில் அனுமதி மறுப்பால் ஏமாற்றம்

புதுவையில் காதலர் தினத்தையொட்டி நேற்று காதல் ஜோடிகள் குவிந்தனர். பாரதி பூங்காவில் அனுமதி மற்றுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-02-15 12:33 GMT
காதலர் தினம்
உலகெங்கும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் பூங்கா, கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கூடி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். காதலர் தினத்தை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து காதல் ஜோடிகள் நேற்று புதுவைக்கு வந்தனர். அவர்கள் அதிகாலையிலேயே கடற்கரைக்கு வந்து அன்பு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். உள்ளூர் காதலர்கள் சிலரும் அங்கு வந்து காதலர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

காதலின் அடையாளமான ரோஜா பூ உள்ளிட்ட பூக்கள் மற்றும் பரிசுப் பொருட்களின் விற்பனையும் அமோகமாக இருந்தது. நகரின் ஒயிட் டவுண் பகுதியில் உள்ள சாலைகளில் அதிக அளவில் காதல் ஜோடிகளை காண முடிந்தது.

பாரதி பூங்காவில் அனுமதி மறுப்பு
புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள பாரதி பூங்கா நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று காலை வழக்கம்போல் பூங்கா திறக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த காதல் ஜோடிகளை பாதுகாப்பு பணியில்இருந்த போலீசார் பூங்காவுக்குள் அனுமதிக்கவில்லை. பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் காதலர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கடற்கரை பகுதிக்கு சென்ற காதலர் தினத்தை கொண்டாடினர்.

பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
இதை அறிந்த பெரியார் திராவிடர் கழகத்தினர் கடற்கரை சாலைக்கு சென்றனர். டூப்ளே சிலை அருகில் அவர்கள் நின்று கொண்டு அங்கு வந்த காதல் ஜோடிகளுக்கு பூங்கொத்து, இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சுய்ப்ரேன் வீதிக்கு வந்த காதலர்கள் அங்குள்ள ‘லவ் லாக் டீரி’யில் பூட்டு போட்டு அதன் முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு ஏரி ஆகிய பகுதிகளிலும் நேற்று காதலர்கள் ஜோடி ஜோடியாக குவிந்தனர்.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் செந்தில்முருகன், நிர்வாகிகள் நாகராஜன், மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் காதலர் தினத்திற்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்