திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 2 மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 2 மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-02-15 16:29 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 2 மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
தீக்குளிக்க முயன்ற தாய்-மகள்கள் 
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஏராளமான மக்கள் மனு கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் 2 சிறுமிகளுடன் அங்கு வந்தார். பின்னர் திடீரென அவர் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணெயை தன் மீதும், சிறுமிகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தீக்குளிப்பு முயற்சியை தடுத்து 3 பேரையும் மீட்டனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தீக்குளிக்க முயன்றவர் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூரை சேர்ந்த ஜெயந்தி (வயது 30) மற்றும் அவருடைய 2 மகள்கள் என்பது தெரியவந்தது. மேலும் ஜெயந்தி கூறுகையில், உறவினர் ஒருவர் ரூ.1 லட்சம் வாங்கி கொண்டு திரும்ப தராததோடு, பூர்வீக சொத்துகளை எழுதி தருவதாக ஏமாற்றுகிறார். இதனால் விரக்தியில் 2 மகள்களுடன் தீக்குளிக்க முயன்றதாக அவர் கூறினார். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவுரை கூறி, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மற்றொரு சம்பவம் 
அதேபோல் கலெக்டர் அலுவலகத்துக்கு சிறுவனுடன் வந்த பெண் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரித்தனர். விசாரணையில் குஜிலியம்பாறையை அடுத்த பாளையம் அருகேயுள்ள சாணிபட்டியை சேர்ந்த கருப்பசாமி மனைவி சித்ரா மற்றும் அவருடைய மகன் என்பது தெரியவந்தது.
அதுபற்றி சித்ரா கூறுகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அரசு மானியத்துக்கு ஆணை வழங்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை மானியம் கிடைக்கவில்லை. இதனால் கடன் வாங்கி வீடு கட்டி பெரும் சிரமத்தில் இருக்கிறேன். அதோடு வீடு கட்டுவதற்கு உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுக்கின்றனர். அதனால் தீக்குளிக்க மண்எண்ணெயுடன் வந்ததாக கூறினார். இதைத் தொடர்ந்து அவருக்கு அறிவுரை கூறி மனு கொடுக்க அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்