குளமங்கலம் அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

குளமங்கலம் அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-02-16 17:57 GMT
கீரமங்கலம், பிப்.17-
 கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமகத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்குள்ள 35அடி உயர குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலை அணிவிப்பது மிகவும் புகழ்பெற்றது. இந்த நிகழ்வுகளைக் காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வந்து செல்வார்கள். இந்த கோவிலுக்கு வந்து செல்ல 3 வழிகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து சாலைகளிலும் மாற்றிவிடப்படும். அதே போல குளமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம், திருநாளூர், மறமடக்கி, வடகாடு, மாங்காடு, ஆங்காடு, கீழாத்தூர், புள்ளாண்விடுதி உள்பட பல கிராமங்களில் இருந்தும் குளமங்கலம் வடக்கு 4 ரோடு வழியாகவே மாலைகள் கொண்டுவரப்படும். பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்த சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் சாலையை கடந்து தண்ணீர் செல்லும் பாலமும் உடைந்து மண் போட்டு மூடியுள்ளனர். இவ்வளவு மோசமான சாலையில் வாகனங்கள் செல்ல தடுமாறும் நிலை ஏற்படுவதால் விபத்துகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்