வங்கி பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

வேப்பந்தட்டையில் வங்கி பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மேலும் அடுத்தடுத்து 4 கடைகளில் ரூ.1¼ லட்சம் மற்றும் மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதையடுத்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-16 18:39 GMT
வேப்பந்தட்டை:

வங்கியில் கொள்ளை முயற்சி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் ஒன்றிய அலுவலகம் எதிரே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று வங்கி மேலாளர் அறையில் இருந்த பீரோவை உடைத்து பார்த்துள்ளனர். அதில் பணம் எதுவும் இல்லாததால், நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை(லாக்கர்) திறக்க முயற்சி செய்துள்ளனர்.
அதன் பூட்டை எளிதாக திறக்க முடியாததால் ெகாள்ளை முயற்சியை கைவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முடியாததால் உள்ளே வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பணம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் தப்பின என்பது குறிப்பிடத்தக்கது.
கடைகளில் திருட்டு
இதேபோல் அதே சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை மர்ம நபா்கள் உடைத்துள்ளனர். அப்போது அலாரம் சத்தம் கேட்டதால் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மேலும் செங்கதிர்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான உரக்கடையின் பூட்டை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம், ரேவதி என்பவருடைய கம்ப்யூட்டர் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி, ரஞ்சித்குமார் என்பவருடைய ஓட்டலின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம், சரவணகுமார் என்பவருடைய ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
மாயகிருஷ்ணன் என்பவருடைய உரக்கடை, கருப்பையா என்பவருடைய பல்பொருள் அங்காடி, ஜெயராமன் என்பவருடைய எலக்ட்ரிக்கல் கடை, முருகேசன் என்பவருடைய பெட்டிக்கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை
நேற்று காலை வங்கி மற்றும் கடைகளை திறக்க வந்தவர்கள், அவற்றின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. வங்கி மற்றும் திருட்டு நடந்த சில கடைகளுக்கு ஓடிச்சென்ற மோப்ப நாய் பின்னர் நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வங்கி மற்றும் கடைகளில் பதிவான கைரேகைகள் பதிவு செய்து, தடயங்களை சேகரித்தனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கருப்பையா என்பவருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து ஆயிரம் ரூபாய் மற்றும் மாயகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான உரக்கடையில் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை மர்ம நபர் திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே கடைகளில் மீண்டும் மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சாலை மறியல்
இந்நிலையில் கடந்த வாரம் கருப்பையாவின் பல்பொருள் அங்காடியில் திருட்டு நடந்தபோது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட்டில் ஈடுபடும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த பதிவை, போலீசாரிடம் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது பல இடங்களில் மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்று கூறி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் வேப்பந்தட்டையில் நீண்டகாலமாக பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜவஹர்லால், அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தனிப்படை அமைத்து திருடர்களை விரைவில் பிடிப்பதாகவும், உடனடியாக புறக்காவல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதற்றத்துடன் திரண்ட வாடிக்கையாளர்கள் 
இதற்கிடையே வேப்பந்தட்டையில் வங்கியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியதால் வங்கியில் நகை அடகு வைத்தவர்கள் உள்ளிட்ட பல வாடிக்கையாளர்கள் பதற்றத்துடன் வங்கியின் முன்பு திரண்டனர். அங்கு நகை எதுவும் திருட்டு போகவில்லை என்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டு அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்