ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்; 360 பேர் பங்கேற்பு

ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில் 360 பேர் பங்கேற்றனர்.

Update: 2021-02-17 22:55 GMT
ஈரோடு
 வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில் 360 பேர் பங்கேற்றனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள்
தமிழக அரசின் அனைத்து சிறப்பு திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் வருவாய்த்துறை செயல்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, சட்டசபை தேர்தல் நடத்தும் பணி, பேரிடர் மேலாண்மை, மக்கள் குறை களைதல், முக்கிய பிரமுகர் வருகை என அனைத்து பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். வருவாய்த்துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி வழங்கப்பட வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களின் பணி வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டருக்கு வழங்க வேண்டும்.
வேலைநிறுத்த போராட்டம்
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி ஆணை வெளியிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் 360 வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஈரோடு தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களும் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்