ரவுடிகள் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை-ஐகோர்ட்டு உத்தரவு

ரவுடிகள் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை போலீசாருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Update: 2021-02-21 18:48 GMT
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த அம்ஜத்கான், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மீன்பிடிக்கும் கூலி வேலை செய்து வருகிறேன். என் மனைவி மாற்றுத்திறனாளி. எங்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். எங்கள் பகுதியை சேர்ந்தவரை நான் தாக்கியதாக மண்டபம் போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு என் மீது வழக்குபதிவு செய்தனர். பின்னர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக கூட்டத்தில் பிரச்சினையில் ஈடுபட்டதாக நான் உள்பட பலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதுதவிர என் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறாக நான் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. ஆனால் போலீசார் என்னை ரவுடிகள் பட்டியலில் சேர்த்து உள்ளனர். இது சட்டவிரோதம். நான் எந்த ஒரு தண்டனையும் பெறவில்லை. அப்படி இருக்கும்போது என்னை ரவுடிகள் பட்டியலில் போலீசார் சேர்த்து உள்ளனர். எனவே அந்த பட்டியலில் இருந்து என் பெயரை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர் மனுவை பரிசீலித்து 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் செய்திகள்