6 ஆயிரம் கோழிகளை கொன்றவர் பிடிபட்டார்

செண்பகராமன்புதூர் அருகே தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை கொன்றவர் சென்னையில் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்.

Update: 2021-02-21 19:43 GMT
ஆரல்வாய்மொழி, 
செண்பகராமன்புதூர் அருகே தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை கொன்றவர் சென்னையில் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்.
கோழிகள் சாகடிப்பு
துவரங்காடு அருகே காஞ்சிரங்கோட்டை சேர்ந்தவர் சுரேஷ் (வயது31). இவரும் மார்த்தாலை சேர்ந்த ராஜனும் சேர்ந்து செண்பகராமன்புதூர் அருகே அவ்வையாரம்மன் கோவில் பின்புறத்தில் சானல் கரையோரம் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்கள். பண்ணையில் சுமார் 12 ஆயிரம் கோழிகள் இருந்தன. கோழிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக பண்ணையின் அருகே குடிநீர் தொட்டி அமைத்திருந்தார். 
நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு பண்ணையை பராமரித்து வரும் முருகன் என்பவர் கோழிக்கு உணவு அளிக்க சென்ற போது சுமார் 6 ஆயிரம் கோழிகள் சாரை சாரையாக செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
தண்ணீரில் விஷம்
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடத்திய விசாரணையில் பண்ணையில் உள்ள குடிநீர் தொட்டியில் விஷம் கலந்திருப்பதும், அந்த தண்ணீரை குடித்ததால் தான் 6 ஆயிரம் கோழிகள் இறந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பூதப்பாண்டி அருகே உள்ள மத்தியாஸ் நகரை சேர்ந்த ஷாஜன் (32) என்பவர் முன்விரோதம் காரணமாக கோழிப்பண்ணை உரிமையாளர் சுரேஷை பழிவாங்க கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றது அம்பலமானது. இந்த சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஷாஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே ஷாஜன் தலைமறைவானார். அவரை பிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
தனிப்படை போலீசார் ஷாஜனின் செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிய தீவிரமாக முயற்சி எடுத்தனர். அப்போது அவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று ஷாஜனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்