அன்னூர் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை கொன்ற 2 பேர் கைது

அன்னூர் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-21 22:09 GMT
காட்டுப்பன்றி வேட்டை 

சிறுமுகை வன சரகத்திற்கு உட்பட்ட அன்னூர் ஒன்றியம் வடக்கலூர் பகுதியில் வனச்சரகர் கணேசன் நேற்று சோதனையில் ஈடுபட்டு இருந்தார் அப்போது அப்பகுதியில் 2 பேர் காட்டுப்பன்றியை வேட்டையாடி, அதன் இறைச்சியை தீயினால் சுட்டு சமையல் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

 அவர்களை வனச்சரகர் கணேசன் பிடித்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் அவர்கள் அன்னூர் பசூர் செட்டிபுதூரை சேர்ந்த ஜேம்ஸ் என்ற ராமசாமி (வயது 38), காளியப்பன் (50) என்பது தெரியவந்தது. அப்போது அவர்கள் அவுட்டுக்காய் (நாட்டு வெடிகுண்டு) வைத்து காட்டுப்பன்றியை கொன்றது தெரியவந்தது. 

2 பேர் கைது

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்,  அவர்களுக்கு கடந்த 20-ந் தேதி அன்னூர் வடக்கலூரை அடுத்த பட்டக்காரன் புதூர் கணக்கன் குட்டை பகுதியில் மரம் வெட்ட சென்ற போது அவுட்டுக்காய் கிடைத்துள்ளது. அதனை அங்கே வெடிக்க வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை எடுத்து வந்ததும் தெரியவந்தது. 

இதற்கிடையில் வனக் கால்நடை மருத்துவர், சுகுமார் காட்டுபன்றியின் உடல் பாகங்களை ஆய்வு செய்து அவுட்டுக்காய் வைத்து காட்டுப்பன்றியை கொன்றது உறுதி செய்தார்இதனைத் தொடர்ந்து வனசரகர் கணேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமி, காளியப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.  

மேலும் அவர்களிடம் இருந்த காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.  பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்