ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா காலத்தில் 1,602 பேருக்கு ‘ஆஞ்சியோகிராம்’ மற்றும் ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 1,602 பேருக்கு ‘ஆஞ்சியோகிராம்’ மற்றும் ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சைகள் செய்யப்பட்டு, தொடர்ந்து 4-வது ஆண்டாக தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

Update: 2021-02-22 13:14 GMT
சென்னை, 

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 32 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் 98 சதவீதம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் இதய கோளாறு ஏற்பட்டவர்களுக்கு, அதற்கான சிகிச்சை அளிக்க தனி இதய சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் இதயத்தில் கோளாறு ஏற்பட்ட 3 ஆயிரத்து 2 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 300 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு, அதற்கான சிகிச்சையுடன் கொரோனா சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் பாலாஜி கூறியதாவது:-

‘ஆஞ்சியோகிராம்’ மற்றும் ‘ஆஞ்சியோபிளாஸ்டி’

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2013-ம் ஆண்டு நவீன இதய ஆய்வு கூடம் (கேத் லேப்) தொடங்கப்பட்டது. கொரோனா காலத்திலும் இந்த சேவை நிறுத்தப்படாமல் ‘ஆஞ்சியோகிராம்’ மற்றும் ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை நடைபெற்றது.

இதுவரை 5 ஆயிரத்து 43 பேருக்கு ‘ஆஞ்சியோகிராம்’ மற்றும் ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மட்டும் 1,602 பேருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘ஆஞ்சியோகிராம்’ மற்றும் ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரி தமிழகத்தில் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

இந்த சிகிச்சை அனைத்தும் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் செய்யப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்