தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 குடும்பத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-02-22 17:52 GMT
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 குடும்பத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். இந்த நிலையில் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு 2 சிறுமிகளுடன் வந்த ஒரு பெண் சேலையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தன் மீதும் அந்த சிறுமிகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள். இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அரூர் அருகே உள்ள சந்திராபுரத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 38) என தெரியவந்தது.
வழிப்பாதை தகராறு
கணவரை இழந்த இவர் தனது விவசாய நிலத்தின் அருகே ஏற்பட்ட வழிப் பாதை பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. இருந்தபோதிலும் வழிப்பாதை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனவேதனை அடைந்து தனது 2 மகள்களுடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாய்-மகன்
இதேபோல் பொம்மிடி பகுதியை சேர்ந்த விஜயா (45), இவருடைய மகன் வினோத் குமார் (25) ஆகியோர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது பூர்விக சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் மனமுடைந்து தாய்-மகன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்