அம்பை தாலுகா அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

அம்பை தாலுகா அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-02-23 22:43 GMT
அம்பை:
அம்பையில் தாலுகா அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்துதல், தனியார் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் மாநிலம் தழுவிய குடியேறும் போராட்டத்தை நடத்தினர். அப்போது அரசு சமூக நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளுக்காக ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளனர். அதன்பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நேற்று அம்பை தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி அந்த சங்கத்தினர் கோரிக்கை அட்டைகளுடன் தாலுகா அலுவலகம் வந்தபோது தாலுகா அலுவலக நுழைவுவாயிலில் போலீசார் தடுப்புகளை அமைத்து உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். மேலும் வருவாய்த்துறை சார்பில், ஏற்கனவே போராட்டம் நடைபெறுவதால் தாலுகா அலுவலகத்தில் யாரும் இல்லை, துணை தாசில்தாரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து விட்டு செல்லுங்கள் என போலீசார் கூறினர்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சங்க மாவட்ட இணை செயலாளர் அகஸ்தியராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். 

விவசாய சங்க செயலாளர் ஜெகதீசன் வாழ்த்துரை வழங்கினார். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 66 பெண்கள் உள்பட 112 பேரை அம்பை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்