மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கு: முதியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-02-23 22:50 GMT
சேலம்:
மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கொலை முயற்சி
சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது (வயது 62). இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ராணி. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த மாது, மனைவியை கொடுவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராணி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மாதுவை கைது செய்தனர்.
3 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிந்ததால் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது மனைவியை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக மாதுவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்