உணவு, தங்கும் இடம் வழங்க கோரி அமைச்சர் வீட்டின் முன் குவிந்த நர்சுகளால் பரபரப்பு

அரசு சார்பில் உணவு, தங்கும் இடம் இலவசமாக வழங்க கோரி அமைச்சர் வீட்டின் முன் நர்சுகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-02-26 22:57 GMT
சென்னை, 

கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நர்சுகள் 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில், இலவசமாக உணவு மற்றும் தங்கும் வசதியுடன் பணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்தநிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தற்காலிக நர்சுகள் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வீட்டின் முன் அரசு சார்பில் உணவு, தங்கும் இடம் இலவசமாக வழங்க கோரி குவிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் ஏற்கனவே பணி செய்து வந்த மருத்துவமனையில் வேலையை விட்டு விட்டு தான் இந்த பணிக்கு வந்தோம். தற்போது இந்த பணியில் எங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாமல் இருப்பது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகிறது.

மேலும் தற்போது நாங்கள் வேலை செய்யும் மருத்துவமனையில் உணவு, தங்கும் வசதி கிடையாது என அறிவித்துள்ளனர். நாங்கள் வாங்கும் ஊதியத்தில் வெளியே அறையெடுத்து தங்குவது மிகவும் கடினமாக உள்ளது. எனவே எங்களுக்கு உணவு, தங்கும் இடத்தை அரசு இலவசமாக வழங்க வேண்டும். மேலும் எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து நர்சுகளை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர், அவர்களுக்கு தங்கும் வசதியை ஏற்பாடு செய்து தருவதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்