சென்னையில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படை மாநகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்

சென்னையில் தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுக்களை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2021-02-28 05:46 GMT
சென்னை, 

தமிழக சட்டமன்ற பொதுதேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந்தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, சென்னையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.

அதைதொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கும் பறக்கும் படை குழுக்களின் வாகனங்களை கமிஷனர் கோ.பிரகாஷ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் நிருபர்களிடம் கோ.பிரகாஷ் கூறியதாவது:-

தேர்தல் பறக்கும் படை

சென்னையில் தேர்தல் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் 48 பறக்கும் படை குழுக்கள், 48 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 16 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் என ஒவ்வொரு தொகுதிக்கும் 8 மணிநேரம் என்ற சுழற்சி முறையில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த பறக்கும் படையில் மாநகராட்சி அலுவலர், வருவாய் துறை அலுவலர், போலீசார் இடம்பெற்று இருப்பார்கள். சென்னையில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் அனைத்தும் அகற்றும் பணி நடந்து வருகிறது.

அதேபோல் தனியார் கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஓவியங்கள் அழிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு 16 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 16 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 16 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தபால் வாக்கு

சென்னையில் மொத்தம் 5 ஆயிரத்து 911 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 2 ஆயிரத்து 157 துணை வாக்குச்சாவடிகள் அடங்கும். இது கடந்த தேர்தலைவிட 45 சதவீதம் அதிகமாகும். சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் 29 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.

இந்த தேர்தலில் புதிய நடைமுறையாக மாற்றுத்திறனாளிகளுக்கும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் தபால் வாக்குகள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்த நபர்கள் மற்றும் அறிகுறிகளுடன் உள்ள நபர்களுக்கும் தபால் வாக்கு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பறக்கும் படை மற்றும் குழுக்களை கண்காணிப்பதற்காக ரிப்பன் மாளிகை யில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் தங்களது புகார்களை ‘1950’ என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்