போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் போலீசாருக்கான இலவச மருத்துவ முகாமை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

Update: 2021-02-28 14:47 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கு இலவச கண் சிகிச்சை, பல் மருத்துவம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், நமது உடல் நலம் மிக முக்கியமானது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
போலீசார் அனைவரும் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவ்வப்போது உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, அதில் குறைபாடுகள் இருந்தால், உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல் நலத்தை பேணி காக்க வேண்டும். இந்த மருத்துவ முகாமை போலீசார் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
முகாமில் அகர்வால் கண் ஆஸ்பத்திரி பொது மேலாளர் உலகநாதன், நிர்வாகி சதீஷ், டாக்டர்கள் காந்திமதி, குமாரவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜன், பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்