துப்புரவு ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துப்புரவு ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2021-02-28 18:01 GMT
திருபுவனை,

திருபுவனை அருகே உள்ள சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 47). இவர் பி.எஸ்.பாளையம் பள்ளியில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு பள்ளிக்கு வந்த மாணவி ஒருவருக்கு பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தந்தை திருபுவனை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் 2018-ம் ஆண்டு பரமசிவம் குற்றவாளி இல்லை என்ற தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் துப்புரவு பணியாளர் பரமசிவம் மீது குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அபராத தொகையை கட்டத்தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு புதுவை அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்