காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.

Update: 2021-02-28 23:55 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவருடைய மனைவி சந்தானலட்சுமி(வயது 42). இவர் நேற்று காலை 7 மணியளவில் தனது வீட்டில் சேகரமான குப்பைகளை வெளியே உள்ள தொட்டியில் கொட்டுவதற்காக சென்றார். 

அப்போது அங்கு புதர் மறைவில் நின்றிருந்த காட்டெருமை திடீரென வெளியே வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தானலட்சுமி, அவரது வீட்டுக்குள் தப்பி செல்ல முயன்றார். எனினும் துரத்தி வந்த காட்டெருமை அவரை முட்டி தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். 

சிகிச்சை

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் காட்டெருமையை வனப்பகுதியை நோக்கி விரட்டியடித்தனர். தொடர்ந்து சந்தான லட்சுமியை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் வீரமணி ஆகியோர் நேரில் சென்று, அவரை சந்தித்து ஆறுதல் கூறினர்.  மேலும் கன்னிகாதேவி காலனிக்கு சென்று மீண்டும் காட்டெருமை ஊருக்குள் வராமல் தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.

மேலும் செய்திகள்