திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது 25-ந் தேதி ஆழித்தேரோட்டம் நடக்கிறது

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந் தேதி ஆழித்தேரோட்டம் நடக்கிறது.

Update: 2021-03-02 16:50 GMT
திருவாரூர்:-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந் தேதி ஆழித்தேரோட்டம் நடக்கிறது. 
தியாகராஜர் கோவில்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாவும் திகழ்கிறது. திருவாரூரில் பிறந்தாலும், திருவாரூர் பெயரை சொன்னாலும் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலமாகும். இந்த சிறப்புமிக்க கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். 
பங்குனி திருவிழா
அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், சந்திரசேகரர், தருனேந்தசேகரி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் 4 வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 
இதையடுத்து பஞ்சமூர்த்திகள் தியாகராஜர் கோவில் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் 54 அடி உயரம் உள்ள கொடி மரத்திற்கு சந்தனம், பால், பன்னீர், மஞ்சள். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. 
திரளான பக்தர்கள்
அதன்பின்னர் தியாகராஜர், சண்டிகேஸ்வரர் சன்னதியில் வைத்து உற்சவ பத்திரிகை விவரம் பக்தர்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது. இதில் வேளாக்குறிச்சி ஆதீனம், அறநிலைத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், பரம்பரை அறங்காவலர் தியாகராஜன், செயல் அதிகாரி கவிதா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
ஆழித்தேரோட்டம்
விழாவையொட்டி வருகிற 8-ந் தேதி வரை விநாயகர், சுப்பிரமணியர் உற்சவம், 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நந்திகேஸ்வரர் உற்சவம், 12-ந் தேதி கால பைரவர் உற்சவம், 13-ந் தேதி காட்சி கொடுத்த நாயனார் உற்சவம், 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சந்திரசேகரர் உற்சவம் மற்றும் வன்மீகநாதர் உற்சவம், 19-ந் தேதி தியாகராஜ சுவாமிக்கு வசந்த உற்சவம், 20-ந் தேதி இந்திர விமானம் உற்சவம் நடக்கிறது. 
21-ந் தேதி பூதவாகனம் உற்சவம், 22-ந் தேதி வெள்ளி யாணை வாகன உற்சவம், 23-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன உற்சவம் நடக்கிறது. 25-ந் தேதி ஆழித்தேரோட்டம் நடக்கிறது. 27-ந் தேதி தீர்த்தவாரி, 27-ந் தேதி தியாகராஜ சுவாமிக்கு மகா அபிசேகம் நடக்கிறது. 28-ந் தேதி வியாக்ரபாத மகிரிஷிகளுக்கு தியாகராஜ சுவாமி பாதசரினம் அருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 29-ந் தேதி பக்த காட்சி, சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்