நிலத்தகராறில் பயங்கரம் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது

நிலத்தகராறில் தே.மு. தி.க. பிரமுகரை வெட்டிக்கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-03-03 05:46 GMT
தாம்பரம், 

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). இவர் அதே பகுதியில், டெய்லர் கடை நடத்தி வந்தார். மேலும் தே.மு.தி.க., நகர துணை செயலாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தார். அனகாபுத்தூர் பஸ் நிலையம் அருகே சென்றபோது அவரது வாகனத்தை வழிமறித்த இருவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜ்குமாரின் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகுடீஸ்வரி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தினர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (27) மற்றும் ரஞ்சித்குமார் என்ற சின்னான்டி (30) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட கிடிக்குப்பிடி விசாரணையில் போலீசார் கூறியதாவது:-

அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமார் உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் டோபிகான தெரு, ஜே.என்., சாலை சந்திப்பில் உள்ள ஆற்றங்கரை புறம்போக்கை அந்த பிரமுகர் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது ஏற்கனவே அங்கு கட்டிடம் கட்டியிருந்த நபருக்கு, ஆதரவாக ராஜ்குமார் செயல்பட்டதாக தெரிகிறது. இதனால் ராஜ்குமாருக்கும், அரசியல் பிரமுகருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

கூலிப்படை

இதனால் ஏற்பட்ட நிலத்தகராறில் அந்த அரசியல் பிரமுகர் ராஜ்குமாரை கொலை செய்யும்படி ரஞ்சித்குமாரை தூண்டி விட்டுள்ளார். இதையடுத்து, ரஞ்சித்குமார் தனது நண்பர் காட்டன் சதீசுடன் சேர்ந்து ராஜ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு பல்லாவரம் சந்தைக்கு சென்று, கத்தியை வாங்கி வந்துள்ளார். பின்னர் வீட்டில் மறைத்து வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டிய நிலையில் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

இதற்கிடையில், நேற்று காலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே பதுங்கியிருந்த சதீஷ் மற்றும் ரஞ்சித்குமார் பிடிபட்டுள்ளனர். அதன்பின்னர் ரஞ்சித்குமார் வைத்திருந்த செல்போன் சோதனை செய்தபோது கொலையில் அரசியல் கட்சி பிரமுகர் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கொலை செய்ய தூண்டிய அரசியல் பிரமுகரை வலைவீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

புறம்போக்கு நிலத்தை அபகரிக்கும் விவகாரத்தில் தே.மு.தி.க. பிரமுகரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூலிப்படை மூலம் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்