கோபி அருகே பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் விழா; ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்

கோபி அருகே பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

Update: 2021-03-04 21:32 GMT
கடத்தூர்
கோபி அருகே பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
குண்டம் திருவிழா
கோபி அருகே சிறுவலூர் பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான மாசியில் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 1-ந்தேதி சந்தனக்காப்பு அலங்காரமும், 2-ந் தேதி கிராமசாந்தியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காப்பு கட்டுதலும், பட்டத்தரசி அம்மனுக்கு பொங்கல் வைத்தலும் மற்றும் குண்டம் திறப்பு, தீ மூட்டுதல் போன்ற நிகழ்வுகளும் நடந்தது.
தீ மிதித்தனர்
நேற்று அதிகாலை அம்மை அழைத்தல், வாக்கு கேட்டல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து திருக்கொடி ஏற்றப்பட்டு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தலைமை பூசாரி சக்திவேல் முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து 15 நாட்கள் கடும் விரதமிருந்த பூசாரிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வரிசையாக நின்று குண்டம் இறங்க தொடங்கினர்.
10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சில பெண் பக்தர்கள் கைகளில் வேப்பிலை ஏந்தியும், குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டும் குண்டம் இறங்கினர். இதையொட்டி பச்சைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
அன்னதானம்
குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு கோவில் அறங்காவலர் குழுவின் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) அபிஷேக பூஜையும், தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், நாளை (சனிக்கிழமை) தேர் நிலை சேருதல் மண்டபக்கட்டளையும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டுதலும் நடக்கிறது. பின்னர் கருப்பராயனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வுடன் திருவிழா முடிவடைகிறது.

மேலும் செய்திகள்