வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுத்தால் கண்காணிப்பு கலெக்டர் உத்தரவு

வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுத்தால் கண்காணிப்பு

Update: 2021-03-05 16:51 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில்  வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுத்தால் கண்காணிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 
ரூ.1 லட்சத்துக்கு மேல்...
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வங்கியாளர்களுக்கான அறிவுரைகள் குறித்த கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தேர்தல் நடைமுறையின் போது தனிநபரின் வங்கி கணக்கில் இருந்தும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கடந்த 2 மாதங்களில் வைப்பீடு செய்யாமல் தொகையை திரும்ப பெறாமல் ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுப்பது அல்லது பணத்தை வைப்பீடு செய்வது தொடர்பாக அறிக்கை பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து அல்லது ஒரு தொகுதியில் இருந்து ஆர்.டி.ஜி.எஸ்.மூலம் ஒரு வங்கி கணக்கில் இருந்து பல நபர்களின் கணக்குகளில் தொகையை வழக்கத்துக்கு மாறாக மாற்றுவதை கண்காணிக்க வேண்டும்.
வருமானவரித்துறை
வேட்பாளர் அல்லது அவரது மனைவி, அவரை சார்ந்திருப்போரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏதேனும் தொகை வைப்பீடு செய்தல் அல்லது பணத்தை திரும்ப பெறுவதை கவனிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு கையூட்டு அளிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய சந்தேகத்துக்கு இடமான கொடுக்கல் மற்றும் வாங்கல் ஆகியவற்றையும் கண்காணிக்க வேண்டும்.  ரூ.10 லட்சத்துக்கு மேல் தொகை திரும்பப்பெறப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி, வருமானவரி சட்டங்களின் கீழ் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக, வருமானவரித்துறை ஒருங்கிணைப்பு அதிகாரிக்கும், தலைமை இயக்குனர் அல்லது வருமானவரித்துறை உதவி இயக்குனருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பணத்தை எடுத்துச்செல்லும் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் பயணம் செய்யும் பணியாளர்கள் தகுந்த அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகள் வாகனங்களை மறித்து ஆய்வு செய்யும்போது தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்க தயாராக இருக்க வேண்டும். வங்கிகளின் ஏ.டி.எம்.மில் பணம் வைப்பதற்கு எடுத்து செல்வது, பிற கிளைகளுக்கு கொண்டு செல்வது போன்றவற்றில் தகுந்த ரசீதை வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் தாசில்தார் முருகதாஸ் மற்றும் வங்கியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்