ஊழியர்களின் பிரச்சினைகள் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்படும்

ஊழியர்களின் பிரச்சினைகள் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Update: 2021-03-05 20:04 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அரசு அலுவலகங்களில் அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று அவர் புதுவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஒவ்வொரு வார்டுக்கும் சென்று நோயாளிகள், பொதுமக்களிடம் குறைகள் கேட்டார். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள சில கருவிகளையும் அவர் இயக்கி பார்த்தார். ஆயு‌‌ஷ்மான் பாரத் திட்டத்தில் பதிவு பெற்றவர்கள், பலன் பெற்றவர்கள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். 
அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் செயல்படாதது குறித்து கவர்னரிடம் நோயாளிகள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது ஆலோசகர்களான    சந்திரமவுலி,  ஏ.பி.மகேஸ்வரி ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து      கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவை அரசு ஆஸ்பத்திரி எவ்வாறு செயல்படுகிறது? என்பதை அறிய இங்கு வந்தேன். அப்போது சில குறைகளை தெரிவித்தனர். ஸ்கேன்கள் செயல்படவில்லை என்று தெரிவித்தனர். சிலர் நவீன கேத் லேப் வேண்டும் என்றனர். பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
புதுவை மாநிலத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் எல்லைப்பகுதிகளில் உள்ள பிற மாநில மக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஏனெனில் இது தேசிய தடுப்பூசி திட்டம்தான். அரசு ஊழியர்களின் பிரச்சினைகள் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.

என்னை சமீபத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து குறைகளை தெரிவித்தனர். அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் குறித்து கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு உண்டா? இல்லையா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு       கவர்னர் தமிழிசை  சவுந்தரராஜன் கூறினார். 

மேலும் செய்திகள்