கடன் தொல்லை தாங்க முடியாமல் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லை தாங்க முடியாமல் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-03-05 21:12 GMT
கொடுமுடி
கடன் தொல்லை தாங்க முடியாமல் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேற்பார்வையாளர்
கரூர் தான்தோன்றி மலை தெற்கு வீதியை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 61). இவருடைய மனைவி சரோஜா. மகள்கள் சத்யா, பூர்ணிமா. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
வைரமுத்து கரூரில் ஒரு தனியார் பின்னலாடை நிறுவனத்தில்  மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். மேலும் பண்டிகை பலகார சீட்டும் நடத்தி வந்துள்ளார். 
பலகார சீட்டு மூலம் வரும் பணத்தை வட்டிக்கு விட்டும் தொழில் நடத்தி வந்துள்ளார். 
கடன் தொல்லை
இந்தநிலையில் வைரமுத்துவிடம் பணம் வாங்கியவர்கள் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொழிலில் நஷ்டம் அடைந்த அவர் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் இவருக்கு கடன் தொல்லையும் அதிகமானது. 
இதைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி வைரமுத்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சாலைப்புதூரில் இருக்கும் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றார். அன்று இரவு சாப்பிட்டு முடித்ததும், ஒரு அறையில் தூங்கச்சென்றுவிட்டார். 
தூக்கில் தொங்கினார்...
அறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் இனி வாழ்ந்து என்ன பயன்? என்ற நினைத்த வைரமுத்து மின்விசிறியின் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று முன்தினம் அதிகாலைதான் வைரமுத்து தூக்குப்போட்டுக்கொண்டது அவருடைய உறவினருக்கு தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், உடனே கொடுமுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்