சட்டக்கல்லூரி மாணவர் கொலையில் 6 பேர் கைது

மானாமதுரை போலீஸ் நிலையம் அருகே சட்டக்கல்லூரி மாணவர் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-03-06 18:46 GMT
மானாமதுரை,

மானாமதுைர போலீஸ் நிலையம் அருகே சட்டக்கல்லூரி மாணவர் கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சட்டக்கல்லூரி மாணவர்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள பயணியர் விடுதி எதிரே உள்ள தெருவை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகன் அக்னிராஜ்(வயது 20). இவர் மதுரை சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மானாமதுரை கோர்ட்டு அருகே அருண்நாதன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான அக்னிராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். அங்கு கையெழுத்து போட்டு விட்டு அக்னிராஜ் புறப்பட்டார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் போலீஸ் நிலையம் அருகே அக்னிராஜை வழிமறித்து வாள் மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்ததும் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அக்னிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

6 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். கொலை தொடர்பாக மானாமதுரை உடைகுளம் பகுதியை சேர்ந்த தர்மராஜ்(25), அருண் (எ) பூச்சி இருளப்பன், சக்திவேல்(21), பழையனூர் தாழிக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்வரன் ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்,
மேலும் சிவகங்கை காமராஜர் காலனி ஆகாஷ் (25), சிவகங்கை மட்டாகுளம் பொன்னையன் (22) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்