சென்னை விமான நிலையத்தில் ரூ.35¾ லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

Update: 2021-03-08 00:58 GMT

சென்னை விமான நிலையத்தில், துபாயில் இருந்து சோப்பு வைக்கும் காகித உறைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.35 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 730 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாய் விமானம்

பின்னர் பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர் அந்த விமானத்துக்குள் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் ஒரு இருக்கையின் அடியில் அவசரகால உபகரணங்கள் வைக்கும் பகுதியில் உள்ள பொருட்கள் கலைந்து இருந்ததை கண்டனர்.

ரூ.35¾ லட்சம் தங்கம்

அதை சரி செய்ய முயன்றபோது காகிதத்தால் ஆன குளியல் சோப் உறை ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அந்த உறைக்குள் சோப்புக்கு பதிலாக கருப்பு டேப்பால் சுற்றப்பட்ட நிலையில் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

ரூ.35 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 730 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். பின்னர் விமானத்தில் அந்த இருக்கையில் அமர்ந்து வந்தது யார்? என்பதை ஆய்வு செய்தபோது கடைசியாக வந்த பயணியை கண்டுபிடித்தனர்.

வாலிபர் கைது

அந்த பயணி, இ-பாஸ் வாங்கும் அறையில் இருப்பது தெரியவந்தது. உடனே இ-பாஸ் அறையில் இருந்த மதுரையை சேர்ந்த யாசர் அரபாத் (வயது 22) என்பவரை பிடித்து விசாரித்தனர்.அதில் அவர்தான் துபாயில் இருந்து சோப்பு காகித உறைக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்ததாகவும், சுங்க இலாகா சோதனைக்கு பயந்து அதை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டார். யாசர் அராபத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்