நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா ரத்து

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்தாண்டு நாட்டியாஞ்சலி விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-03-08 17:02 GMT
அண்ணாமலைநகர், 

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவாராத்திரி அன்று நாட்டியாஞ்சலி விழா தொடங்கும். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு ஆடல்வல்லான் நடராஜ பெருமானுக்கு தங்களது நாட்டியத்தை அர்ப்பணிப்பது வழக்கம்.
 மேலும் ஒடிசி, குச்சுப்புடி, கதக் கலைஞர்களும் தங்களது திறமைகளை வெளிபடுத்துவார்கள். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா ரத்து செய்யப்படுவதாக கோவில் பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இந்தாண்டு நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெறாது.

அறக்கட்டளையில் நாளை தொடக்கம்

இருப்பினும் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் கோவிலுக்கு வெளியே தெற்குவீதியில் உள்ள வி.எஸ்.டிரஸ்ட் வளாகப்பகுதியில் வழக்கம் போல் இந்தாண்டும் நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது.  இந்த விழா நாளை (புதன் கிழமை) தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழகம், பதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த தகவலை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வக்கீல் சம்பந்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்