காலணி வாங்குவதுபோல் நடித்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

காலணி வாங்குவதுபோல் நடித்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-08 20:19 GMT
ராஜா
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் முகமது நபிஷ் கான் என்பவர் காலணிகள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று காலை காலணி வாங்குவது போல் வந்த ஒருவர், முகமது நபிஷ் கானின் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த நபர் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முகமது நபிஷ் கான் பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த நபரை தேடி வந்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் அந்த நபரை பிடிக்க, அவரின் அடையாளம் மற்றும் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை அருகே உள்ள மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, அந்த நபர் மோட்டார் சைக்கிளுடன் பிடிபட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த நபரை பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏம்பேரை சேர்ந்த ஏழுமலை மகன் ராஜா என்ற ராக்கெட் ராஜா (வயது 24) என்பது தெரியவந்தது. ராஜா மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள் திருட்ட தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்