தாரமங்கலம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

தாரமங்கலம் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-11 07:28 GMT
தாரமங்கலம்,

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செலவடை கிராம ஊராட்சி பகுதியில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களான செலவடை, ஏரிகாலனி, தாசன் வளவு, பாரதிநகர், அத்திப்பட்டிபுதூர். போயர்தெரு, நாச்சம்பட்டி. ஆசாரித்தெரு. செலவடைமேடு, ஓங்காளியம்மன் கோவில், ஊன்சக்காடு, அத்திக்காரன் வளவு ஆகிய பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய நாள் ஒன்றுக்கு 1.85 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும்.
ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதன் காரணமாக கிராம மக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கிராம மக்கள் பலர் நேற்று தாரமங்கலம்-ஜலகண்டாபுரம் ரோட்டில் செலவடை மேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்ததும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி புவனேஸ்வரி மற்றும் தாரமங்கலம் ஒன்றிய ஆணையாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்