ராணுவ வீரர் வீட்டில் 53 பவுன் நகை கொள்ளை

பண்ருட்டியில் ராணுவ வீரர் வீட்டில் 53 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகி்ன்றனர்.

Update: 2021-03-23 18:56 GMT
பண்ருட்டி, 

பண்ருட்டி தனபால் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 41). இவர்  ஜார்கண்ட் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா (35). இவர் கடந்த 20-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது 2 குழந்தைகள் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சோமாசுபாளையத்தை சேர்ந்த தனது மாமியாருடன் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மாமியார் வீட்டுக்கு சென்று குழந்தைகளுடன் தங்கினார்.  இந்த நிலையில் பிரியா வீட்டின் முன்பக்க கதவு நேற்று உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே பிரியாவுக்கு  செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பிரியா பதறி அடித்துக்கொண்டு தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். 

53 பவுன் நகை கொள்ளை 

அப்போது வீட்டின் ஒரு அறையில் இருந்த 2 பெட்டியை உடைத்து அதில் இருந்த 53 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
 இதில் பிரியா தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கொள்ளை போன நகையின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 

வலைவீச்சு

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கடலூரில் இருந்து  மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. 
அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை  தேடி வருகின்றனர். ராணுவ வீரர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்