மாற்றுத்திறனாளிகள் வாகன விழிப்புணர்வு ஊர்வலம்

பாளையங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2021-03-23 20:19 GMT
நெல்லை, மார்ச்:
பாளையங்கோட்டையில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதையொட்டி நேற்று மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன ஊர்வலம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை காது கேளாதோர் பள்ளியில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. நெல்லை உதவி கலெக்டர் (பயிற்சி) அலர்மேல் மங்கை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் பாளையங்கோட்டை பஸ்நிலையம், மகாராஜ நகர் ரவுண்டானா வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற ஊர்வலத்தில் 50-க்கும் மேற்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் மாற்றுத்திறனாளிகளுடன் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்திய காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாணவ-மாணவிகளின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் மற்றொரு பயிற்சி உதவி கலெக்டர் மகாலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்டு, பாளையங்கோட்டை தாசில்தார் செல்வன், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு ஏற்பாடுகள்

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
சட்டமன்ற பொதுத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் முதலில் வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. வாக்களிக்க செல்லும் இடத்தில் எளிதில் வாக்களிக்கும் வகையில் சாய்வு தளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ‘பிரெய்லி’ எழுத்து வசதியும் செய்யப்பட்டு உள்ளது. பார்வையற்றவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் ஒருவரை உடன் அழைத்து வரலாம். துணைக்கு வருபவர் பற்றிய விவரத்தை பதிவு செய்ய வேண்டும். துணைக்கு வரும் நபரின் ‘வலது கை ஆள் காட்டி விரலில்’ மை வைக்கப்படும். வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 தன்னார்வ தொண்டர்கள் இருப்பார்கள். மேலும் மாற்றுத்திறனாளிகள் உதவிக்கு 7598000251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்