திண்டிவனத்தில் ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

திண்டிவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-24 17:58 GMT
திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம்   திண்டிவனம் ஆர்.எஸ்.பிள்ளை வீதியில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் உத்தரவின்பேரில், சப்- இன்ஸ்பெக்டர்கள் தமிழ்மணி, ஆனந்தராசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை , மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. 

தொடர்ந்து போலீசார் விசாரித்த போது, அந்த வீடு கரிம் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த வீட்டை அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் அகமதுல்லா(வயது 39) என்பவர் வாடகைக்கு எடுத்து, புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

2 பேர் கைது

  மேலும் அவர் பொன்னி நகரை சேர்ந்த கண்ணன் மகன் ஜெயராமன் (52) என்பவரிடம் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி, திண்டிவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமப்புற கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்தது அகமதுல்லா, ஜெயராமன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்