தேர்தல் நடத்தை விதிமுறை எதிரொலி ஈரோடு மாட்டுச்சந்தையில் வர்த்தகம் பாதிப்பு

தேர்தல் நடத்தை விதிமுறை எதிரொலியால் ஈரோடு மாட்டுச்சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Update: 2021-03-25 21:10 GMT
ஈரோடு
தேர்தல் நடத்தை விதிமுறை எதிரொலியால் ஈரோடு மாட்டுச்சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
மாட்டுச்சந்தை
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். இந்த மாடுகளை வாங்குவதற்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வருவது வழக்கம்.
அதுபோல் நேற்று மாட்டுச்சந்தை கூடியது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணத்தை எடுத்து செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்காரணமாக வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்காக பணத்தை எடுத்து வர தயக்கம் காட்டி வருகிறார்கள்.
வர்த்தகம் பாதிப்பு
சில வியாபாரிகள் தங்களது பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்று பெற்று வியாபாரத்துக்கு பணத்தை எடுத்து வருகிறார்கள். இதன்காரணமாக கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகளின் வருகை குறைந்தது. இதனால் மாட்டுச்சந்தையில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாட்டுச்சந்தை நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த வாரம் கூடிய சந்தைக்கு 450 பசு மாடுகள், 200 எருமை மாடுகள், 100 கன்றுக்குட்டிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வியாபாரிகள் குறைவாக வந்தனர். மாடுகளை விற்பனை செய்து பணத்தை எடுத்து செல்லும் விவசாயிகளிடம் நாங்கள் ரசீது எழுதி கொடுக்கிறோம்”, என்றனர்.

மேலும் செய்திகள்